ட்ரீம்ஸ் - 24 திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி நலவழித் துறையினர் நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (வி.சி.ஆர்.சி.,) மற்றும் பள்ளி கல்வி இயக்ககம், மாநில பயிற்சி மையத்துடன் இணைத்து 'ட்ரீம்ஸ்-24' (டெங்கு தடுப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு-24) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுத்திட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் விரிவான 'ட்ரீம்ஸ்-24' திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கடந்த 10ம் தேதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தலா 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 1,000 ஆசிரியர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. பயிற்சி முகாம் நாளை மறுநாள் 27ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, டெங்கு தடுப்பு பயிற்சி வழங்கி, டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்து உள்ளனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், டெங்கு இணைப்பு செயலி மூலம், டெங்கு குறித்து, அனைத்து, விபரங்களையும் பதிவு செய்து, நோயீனி கடத்தி துறைக்கு அனுப்ப வேண்டும். அதில், டெங்கு, குறித்து விபரங்களை தரும் பள்ளிகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்பட உள்ளது. நேற்று துவக்கிய பயிற்சி முகாமை, கல்வித்துறை சுகுணாசுகிதா பாய் துவக்கி வைத்தார். மலேரிய உதவி இயக்குநர் வசந்தகுமாரி முன்னிலை வகித்தார். நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்கள், ஸ்ரீகாந்த், ஆரியா ஆகியோர் பயிற்சி அளித்தனர். சுகாதார ஆய்வாளர் இளையதாசன், தொழில் நுட்ப உதவியாளர்கள் சேதுபதி, மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.