புதுச்சேரி : புதுச்சேரி கோபாலன் கடை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் நகரில், ஸ்ரீ சத்ய சாயி சேவா மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.மனித குல மேம்பாட்டிற்காக கடந்த 1960ம் ஆண்டு சத்ய சாய் பாபா, சத்ய சாய் சேவா நிறுவனங்களை துவக்கி வைத்தார். இச்சேவை நிறுவனங்கள் அனைவருக்கும் தன்னலமற்ற சேவை ஆற்றிடவும், மனிதனுள் உறைந்துள்ள தெய்வீகத்தை உணர்ந்து, விழிப்புணர்வு பெற்று உயர்நிலை பெறும் சிறந்த களமாக விளங்கி வருகின்றன.புதுச்சேரி மாவட்டத்தில், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், ஜிப்மர், தேங்காய்த்திட்டு, மோகன் நகர், புதுச்சேரி டவுன் பகுதியில், 5 சத்ய சாய் சேவா சமிதிகளும், 5 பஜனை மண்டலிகளும் இயங்கி வருகின்றன.இதில், வாரந்தோறும் பஜனை வழிபாடுகளிலும், நகர சங்கீர்த்தனம் எனும் வீதி தோறும் தெய்வீக பாடல்களை பாடுதல், கிராமங்களில் மருத்துவ சேவை செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலயங்களை சுத்தம் செய்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் பணிகள் நடந்து வருகின்றன.அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி கோபாலன் கடை, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நகரில், சாய் கிருஷ்ணா என்ற பெயரில், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் கீழ் தளம், சத்ய சாய் நிகழ்ச்சிகளும், முதல் தளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, காலை 6:00 மணிக்கு வாஸ்து, நவக்கிரக பூஜை, சாய் காயத்ரி ஹோமங்கள், காலை 8:30 மணிக்கு பஜனை நடந்தது.தொடர்ந்து காலை 9:30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு, சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் மோகன் வரவேற்றார். சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் கட்டடத்தை திறந்து வைத்து நோக்கவுரையாற்றினார்.சிறப்பு விருந்தினரான கவர்னர் தமிழிசை, சேவை மையத்தில் அமைந்தள்ள பல்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அரங்கை திறந்து வைத்தார். முன்னதாக, முதல்வர் ரங்கசாமி அமிர்த கலசம் என்னும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் வாழ்த்துரை வழங்கினர். சத்ய சாய் தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர் கிேஷார் நன்றி கூறினார்.அதைத் தொடர்ந்து சத்ய சாய் பாபாவின் மகா தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.