உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உயர்த்தப்பட்ட மகளிர் உதவித் தொகை வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கி வைப்பு

 உயர்த்தப்பட்ட மகளிர் உதவித் தொகை வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கி வைப்பு

வில்லியனுார்: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், உயர்த்தப்பட்ட நிதி உதவி தொகை வழக்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டம், வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட நிதி உதவி தொகை வழங்கும் விழா, திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, உதவித் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: முதியோர் உதவித் தொகை 500 ரூபாய் உயர்த்தி முதல் கையெழுத்து போட்டோம். மகளிர் உதவித் தொகை 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் புதிய ஐ.டி., பார்க் மற்றும் தொழிற்சாலை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். புதுச்சேரிக்கு வரும் பிரதமர், அதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார். இதனால், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும். புதுச்சேரியில் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து கல்வீடு கட்ட ரூ. 5 லட்சம், ஆதிதிராவிடர்களுக்கு ரூ. 7 லட்சம் மானியமாக கொடுத்து வருகிறோம். மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஐந்தாண்டுகளை வீணடித்த காங்., கட்சியினர், தற்போது நடைபயணம் என்ற பெயரில் பொய்களை கூறி வருகின்றனர். புதுச்சேரியில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என மக்கள் எண்ணி பார்க்கவேண்டும். மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 123 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி கொடுத்துள்ளோம். ரூ. 200 கோடி திட்ட மதிப்பில் சாலை, புதிய பாலங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு பணிகள் சில தினங்களில் துவங்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும்' என்றார். விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், லட்சுமிகாந்தன், ரமேஷ், செல்வம், துறை செயலாளர் சவுத்ரி முகமது யாசின், துறை இயக்குனர் முத்துமீனா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி