புதுச்சேரி: சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு திட்டத்தை கண்டித்து, இண்டி கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் காங்., வைத்திலிங்கம், தி.மு.க., சிவா, இந்திய கம்யூ., சலீம், மா.கம்யூ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல அரசியில் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், புதுச்சேரியில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.பி.எல்.ஓ., மற்றும் பி.எல்.ஏ.,க்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்புகள் ஏற்படுத்தவில்லை. தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள 2002, 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமை அற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, எஸ்.ஐ.ஆர்., சீராய்வை கைவிட வலியுறுத்தி இண்டி கூட்டணி சார்பில் இன்று 11ம் தேதி, காலை 10 மணிக்கு, புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த, ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.