அரசு உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் எம்.பி.சி., - பி.சி., - எஸ்.சி., பிரிவினருக்கு அநீதி இந்திய கம்யூ., சலீம் குற்றச்சாட்டு
புதுச்சேரி : இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முதல்வருக்கு அனுப்பிய மனு: புதுச்சேரி அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், நேரடி போட்டி தேர்வுகள் மூலம் 256 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பாணையில் எம்.பி.சி., - பி.சி., - எஸ்.சி., பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இ.டபள்யூ.எஸ்., வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறை வந்த பின்னர் 31.01.2019 அன்று தான் மாதிரி ரோஸ்டர் வெளியிடப்பட்டது. 31.01.2019 க்கு பின், ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கு மட்டுமே இ.டபள்யூ.எஸ்., இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே 31.01.2019 அன்று காலியாக இருந்த 418 பணியிடங்களில் இருபது சதவீதம் நேரடி தேர்வுக்கு 83 இடங்கள் மட்டுமே வருகிறது. இதில், 10 சதவீதம் என்றால் 8 இடங்கள் மட்டுமே இ.டபள்யூ.எஸ்., பிரிவினருக்கு வழங்க முடியும்.ஆனால் 17 இடங்கள் கூடுதலாக, மொத்தம் 25 இடங்கள் ஒதுக்கீடு செய்து உள்ளனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான இட ஒதுக்கீடு ஆணையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.