மோசடி பேர்வழியிடம் ஏமாந்த இன்ஸ்பெக்டர்
உழவர்கரை, விவேகானந்தர் நகரைச் சேர்ந்த காங்., பிரமுகரான தாண்டவன் கடந்த அக்., மாதம் உயிரிழந்தார். அவரது மனைவி வெண்ணிலாவை தொடர்பு கொண்ட மூலக்குளம் ஜான்குமார் நகர், லுாயிஸ் செட்டியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி எம்.டி.எஸ். ஊழியர் அருள், 44; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 1 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றினார்.இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் அருளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி, பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது. ஆனால் அவரது உறவினர்கள் போலீசில் பணியாற்றுவதாலும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ., உறவினர் என்பதால் வழக்கு ஏதும் இன்றி தப்பித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில ஆண்டிற்கு முன், மீனவ கிராமத்தைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர், அருளை தொடர்பு கொண்டு தனது உறவினர் மகனுக்கு அரசு வேலை வாங்கி தர கேட்டுள்ளார். அதற்காக ரூ. 1 லட்சம் பணம் கொடுத்தும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றினார். சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவுடன், அருளை மிரட்டி பணத்தை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.