உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ரவுடிகளுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ரவுடிகளுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் தனசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி, இந்திரா சதுக்கம் அருகே மாமூல் கேட்டு ரவுடிகள் சிலர் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின்பேரில், கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா அறிவுறுத்தலின்படி முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் கூட்டம் நடந்தது.முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்தில், அப்பகுதிகளில் உள்ள ரவுடிகள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள குற்றவாளிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் தனசேகரன் பேசுகையில், 'சமீபத்தில் பெட்டிக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய சம்பவம் போன்று, இப்பகுதிகளில் நடக்க கூடாது. தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி யாரும் கடைகளுக்கு சென்று மாமுல் கேட்டு தகராறில் ஈடுபடுவது தெரிய வந்தால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய வெளியூர்களில் இருந்து நபர்களை யாரேனும் அழைத்து வந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.உங்களின் நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதால், எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் இருக்குமாறு' எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து, போலீசார் ரவுடிகளின் போட்டோ, முகவரி மற்றும் மொபைல் எண்களை வாங்கி பதிவு செய்து கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை