மின்துறை கட்டுமான உதவியாளர் பணி: பதிவிறக்க நகல் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி: மின்துறை கட்டுமானப் பிரிவு உதவியாளர்கள் பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் அதன் பதிவிறக்க நகலை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறையில் கட்டுமானப் பிரிவின் உதவியாளர் பணியிடத்துக்கு 177 பேர் நேரடி நியமனம் என, கடந்த ஏப்ரல் 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.மறுநாள் 5ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. அதன்படி ஏப்ரல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இணையதளத்தில் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், அதனை பதிவிறக்கம் செய்து தக்க ஆவணங்களுடன் புதுச்சேரி மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2ம் தேதியுடன் அளித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை நேரில் அளிக்காதவர்கள் வரும் 30ம் தேதிக்குள் அதனை அளிக்க வேண்டும். இல்லாவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.