சர்வதேச சிலம்பம் போட்டி புதுச்சேரியில் இன்று துவக்கம்
புதுச்சேரி, : புதுச்சேரியில் சர்வதேச பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்குகிறது. பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் கலையை இளைய தலைமுறையினரிடம் கொண்டும் செல்லும் பணியை இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் அசோசியேஷன் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் இன்றும், நாளையும் சர்வதேச பாரம்பரிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது.இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 முதல் 21 வயதிற்கு உட்பட்ட 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு 6 வயது முதல் 10 வயது வரை, 10- 14; 14-17; 17-21 வயதினர் என நான்கு பிரிவுகளில் எடை அடிப்படையில் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியை, இன்று முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். வி.ஜி.பி., குரூப் சேர்மன் சந்தோஷம் ஆகியோர் அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.