இணைய தின விழிப்புணர்வு பயிலரங்கில் பங்கேற்க அழைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில், நாளை நடக்கும் பாதுகாப்பான இணைய தினம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, 'பாதுகாப்பான இணைய தினம்' குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம், தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன், நாளை (11ம் தேதி) நடக்கிறது.கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் காலை 10:30 மணி முதல் 1:00 மணி வரை நடக்கும் இப்பயிலரங்கில், பொறுப்பான முறையில் இணையப் பயன்பாட்டை வளர்ப்பது, பாதுகாப்பான இணைய நடைமுறைகள், இணையதள சுகாதாரம், இணையதள அச்சுறுத்தல்கள் மற்றும் பயனுள்ள தடுப்பு உத்திகள் குறித்து, இணைய பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இது சம்பந்தமாக, அனைத்து அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு விழிப்புணர்வு நுண்ணறிவு பெற அழைக்கப்பட்டுள்ளனர்.