ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக 3 பேட்டரி வாகனங்கள் அறிமுகம்
புதுச்சேரி: ஜிப்மரில் பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக ஜிப்மரை நாடி வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, அங்குள்ள ஒவ்வொரு கட்டடத்தையும் தேடிச் செல்வதே சில நேரங்களில் பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. வயதானவர்கள், நடக்க முடியாத நோயாளிகள், குழந்தைகளுடன் வருபவர்கள் எனப் பலரும் ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்குச் செல்ல நீண்ட துாரம் நடக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ஜிப்மர் வளாகம் பரந்து விரிந்து காணப்படுவதால், வெளிநோயாளிகள் பிரிவு, சிறப்பு மருத்துவப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை மையம், குழந்தைகள் மருத்துவமனை என ஒவ்வொரு இடத்துக்கும் சென்று வருவது நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இக் குறையைப் போக்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.ஐ.,) சார்பில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மூன்று பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வாகனங்களும் தற்போது வெள்ளோட்டமாக இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் 15 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். இதன் மூலம் நோயாளிகளும், அவர்களுடன் வருபவர்களும் மருத்துவமனை வளாகத்துக்குள் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. ஒவ்வொரு வாகனமும் தினமும் 12 சுற்றுகள் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. ஜிப்மரின் முக்கிய மருத்துவப் பிரிவுகளை இணைக்கும் வகையில், வெளிநோயாளிகள் பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு, புற்றுநோய் சிகிச்சை மையம், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் ஏற்றிச் சென்று வருகின்றன. ஏற்கனவே மருத்துவப் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை, மருந்துகள் வாங்குவது எனப் பல்வேறு நிலைகளில் அலைந்து திரியும் நோயாளிகளுக்கு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே போக்குவரத்து வசதி கிடைத்திருப்பது கூடுதல் ஆறுதலை அளித்துள்ளது. இந்த பேட்டரி வாகனங்கள், ஜிப்மர் நோயாளிகளுக்கு நிச்சயம் பயனுள்ள சேவையாக அமையும்.