உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு சரியாக செயல்படவில்லை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசு சரியாக செயல்படவில்லை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு

புதுச்சேரி : புதுச்சேரியில் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் வீண் வதந்தியை கிளப்புகின்றனர் என, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினர் கூறினார். அவர், கூறியதாவது: புதுச்சேரியில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளேன். அரசின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே தண்ணீரில் பிரச்னை உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். அரசு நடவடிக்கை எடுத்து, தண்ணீரை பரிசோதித்து இருந்தால், மூவர் இறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். இங்கு குடிநீர் குடித்து இறந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் அரசு அறிவிக்கவில்லை. இந்த இடத்தில் இறப்பை வைத்து அரசியல் செய்யவோ, அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கவோ விரும்பவில்லை. அரசு வேலையை சரியாக செய்யவில்லை என்பதால் தான் குரல் கொடுக்கின்றேன். ரூ.300 கோடி செலவு செய்து நான் அரசியலுக்கு வருவது, பல சூதாட்ட தொழில்கள் துவங்குவதற்கு தான் என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். புதுச்சேரியில் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. இன்றைக்கும் நுாறு தலைமுறைக்கு என்னிடம் சொத்து உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால், வீண் வதந்தியை கிளப்புகின்றனர். நாங்கள் வரி மட்டுமே ரூ.5,000 கோடி செலுத்துகிறோம். புதுச்சேரியில் குடிநீர் கூட பிரச்னையாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் நடிப்பை விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ளார். அவரையும் நாம் ஆதரிக்க வேண்டும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை