இ.சி.ஆரில் சட்ட விரோத பேனர்கள் வைத்து கல்யாண கோஷ்டிகள் மீண்டும் அட்டூழியம் விதிமீறிய அச்சகம், கல்யாண மண்டபத்திற்கு சீல் வைக்கப்படுமா?
புதுச்சேரி; இ.சி.ஆரில் கல்யாண கோஷ்டிகள் சென்டர் மீடியனில் ஆபத்தான முறையில் பேனர்கள் வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அரசு உத்தரவை மதிக்காமல் பேனர்களை அச்சடித்த அச்சகம், கல்யாண மண்டபத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி சாலையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், நகராட்சிகள் கடுமையாக எச்சரித்து வருகின்றன. இதனை பொருட்படுத்தாமல், கல்யாண கோஷ்டிகள் இ.சி.ஆரில் மவுடுபேட் முதல் விவேகானந்தா பள்ளி வரை முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை வரவேற்று டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர்.அதுவும் சென்டர் மீடியனில், மின் கம்பங்கள், ைஹமாஸ், போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் என எதையும் விட்டு வைக்காமல் சட்ட விரோதமாக பேனர்களை கட்டி வைத்துள்ளனர்.பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.ஆனால், இந்த சட்ட விரோத பேனர்களின் சம்பந்தப்பட்ட நகராட்சி, நெடுஞ்சாலையிடம் அனுமதி பெற்றதற்கான எந்த ஆணையும் இல்லை. எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது என்ற தகவலும் இல்லை. அச்சகத்தின் பெயர் இல்லாமல் பேனர்கள் அச்சடிக்க கூடாது என்று அரசு ஓயாமல் சொல்லி வருகிறது.அதை பொருட்டாவே எடுத்து கொள்ளாமல், சட்ட விரோத பேனர் அச்சடித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அரசு தயவு தாட்சணம் காட்டாமல் கல்யாண கோஷ்டிகள் வைக்கும் சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்ட விரோத பேனரை அச்சடித்து கொடுத்த அச்சகத்திற்கு சீல் வைக்க வேண்டும். வழக்கு பதிய வேண்டும். அப்போது தான் அச்சகங்களுக்கும் பாடமாக அமையும். சட்ட விரோத பேனர்கள் கல்யாண மண்டபங்களுக்கு தெரியாமல் வைக்க வாய்ப்பில்லை. கல்யாண மண்டபங்களில் இருந்து சட்ட விரோத பேனர்களுக்கு லைட் போடப்படுகிறது. எனவே கல்யாண மண்டபங்களுக்கும் சீல் வைத்து மூடுவதோடு, வழக்கு பதிவும் செய்ய வேண்டும். நீதிமன்றம் நேரடியாக தலையிட்ட பிறகு, புதுச்சேரியில் சாலையில் பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளும் பேனர்கள் வைக்காமல் அடக்கி வாசிக்கின்றனர்.ஆனால், அனைத்து பகுதிகளிலும் கல்யாண கோஷ்டிகள் கண்டமேனிக்கு டிஜிட்டல் பேனர்களை வைத்து வருகின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மீண்டும் சாலையில் பேனர்களை வைக்க கிளம்பி விடுவர். இதுபோன்ற சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், கலெக்டர் குலோத்துங்கன் உறுதியான நடவடிக்கையை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
யார் பொறுப்பேற்பது
சென்னையில் கடந்த 2019ம் ஆண்டு அ.தி.மு.க.,வினர் வைத்த கல்யாண வரவேற்பு பேனர் காற்றில் பறந்து விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற பி.டெக்., மாணவி, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி பரிதாபமாக உயிரிந்தார். இதேபோல், புதுச்சேரியில் பேனர்கள் யார் மீதாவது விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது.பேனர் வைத்தவர்கள் பொறுப்பேற்று கொள்ளுவரா அல்லது அரசு பொறுப்பேற்றுக்கொள்ளுமா. சாலையில் பேனர் வைத்து மக்களின் உயிரோடு தான் விளையாட வேண்டுமா என்பதை பொதுமக்களும் சிந்தித்து பார்த்து சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.