கமகமக்கும் லே கபே... ஓட்டலாக மாறிய பாரம்பரிய பிரெஞ்சு துறைமுக கட்டடம்
புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலையையொட்டி, கடல் அலைகள் கருங்கற்களில் மோதி சுக்குநுாறாக உடைந்து, கரையை தழுவி முத்தமிடும் இடத்தில், வெண்ணிற மாளிகையாக பளீச்சென்று காணப்படுவது லே கபே ஓட்டல்.இது சாதாரண ஓட்டல் என்று கடந்துவிட முடியாது. இன்றைக்கு வேண்டுமென்றால் இந்த கட்டடம் கம கமக்கும் ஓட்டலாக மாறி சுற்றுலா பயணிகளுக்கு விதவித உணவு வகைகளை பறிமாறி, விருந்தோம்பல் செய்து கொண்டு இருக்கலாம்.ஆனால் அந்த காலத்தில் இது தான் கடல் வழியாக வந்த கப்பல்களையும், கடல் வழியாக புதுச்சேரியில் கால்தடம் பதித்த பிரெஞ்சியர் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர்களை வரவேற்ற துறைமுக அலுவலக கட்டடமாகும்.பாரம்பரிய மிக்க இந்த கட்டத்திற்கு பிரெஞ்சியரின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. காந்தி சிலைக்கு பின் வராவதி என்றழைக்கப்படும் துறைமுகம் பாலம் 1886 ஆகஸ்ட் 15ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே இந்த லே கபே கட்டடம் கட்டப்பட்ட பெருமையை தன்னகத்தே உடையது.துறைமுக பாலம் கட்டப்படுவதற்கு முன்னரே 1817ல் கடற்கரையோரத்தில் இந்த கட்டடம் அழகிய நேர்த்தியான வேலைகளுடன் கட்டப்பட்டுள்ளது. அந்த துறைமுக கட்டடத்தில் கடற்கரை சாலை பகுதியில் துறைமுகம் என்றும், கடல் அலைகளை நோக்கிய பின் பகுதியில் பாண்டிச்சேரி என்றும் பெயர் பொறிக்கப்பட்டு, கம்பீரமாக எழுந்து நின்றது.இந்த கட்டடத்தை புய்ரோ த போர் என்றே, அதாவது துறைமுக அலுவலகம் என்ற பெயரில் தான் பிரெஞ்சியர் அழைத்து வந்தனர். புதுச்சேரி இந்தியாவுடன் 1954ல் இணைக்கப்படும் வரை இதே பெயரில் அழைக்கப்பட்டும் வந்தது.பின், புதுச்சேரி அரசிடம் கைமாறிய பிறகு, தான் லே கபே என்ற பெயருடன் சுற்றுலா துறையின் உணவகமாக மாறியது.அந்த காலத்தினை போன்றே இன்றைக்கும் அந்தி சாயும் நேரத்தில் ரம்மியமான சூழலில், கடல் காற்றுடன் கைகோர்த்தப்படி, சுற்றுலா பயணிகளை தன்னுடைய விருந்தோம்பலால் இன்றைக்கும் உச்சி குளிர வரவேற்று, அதே பணியை செவ்வென செய்து வருகின்றது லே கபே கட்டடத்தின் தனிச்சிறப்பு.