போலி ஆவணம் மூலம் கோவில் இடம் விற்பனை காரைக்கால் நகராட்சி நில அளவையாளர் கைது
காரைக்கால்: காரைக்காலில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த வழக்கில் நகராட்சி நில அளவையாளரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீபார்வதிஸ்வரம் கோவிலுக்கு சொந்தமாக, நகர பகுதியில் பல கோடி மதிப்பில் இடங்கள் உள்ளது. இந்த இடங்கள், போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இதுகுறித்து துணை கலெக்டர் ஜான்சன் புகாரின்பேரில், காரைக்கால் நகர போலீசார் சார்பில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்தனர். இதில், கோவிலுக்கு சொந்தமான இடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அரசு சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக போலியான விளம்பரம் செய்யப்பட்டு, போலி ஆவணம் தயார் செய்து இடம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.அதையடுத்து, காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியை சேர்ந்த சிவராமன், 45; என்பவரை, கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.மேலும், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான காரைக்கால் என்.ஆர்.காங்., பிரமுகர் ஆனந்த் என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடிவருகின்றனர்.வழக்கில் போலி ஆவணம் தயார் செய்தது தொடர் பாக காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் அரசு நில அளவையாளர் ரேணுகாதேவி, 45; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.கோவில் இட மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனந்த் மற்றும் நிலம் அளவையாளர் ரேணுகாதேவி ஆகியோரின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் பல முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.