ஆசிய ரோல்பால் போட்டி காரைக்கால் மாணவிக்கு தங்கம்
புதுச்சேரி: கோவாவில் நடந்த ஆசிய அளவிலான ரோல்பால் போட்டியில் இந்திய அணி சார்பில், பங்கேற்ற காரைக்கால் மாணவி வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார்.கோவாவில் மனோகர் பாரிக்கர் மைதானத்தில் ஆசிய அளவிலான ரோல்பால் போட்டி நான்கு நாட்கள் நடந்தன. இந்தியா, நேபாளம், மலேசியா, கத்தார், வியட்நாம், ஈரான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர்.ஒரு நாட்டிற்கு 12 வீரர்கள் வீதம் போட்டியில் பங்கேற்றனர். இந்தியா சார்பில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி, ஈரான் அணியை வென்று தங்கப் பதக்கத்தை பெற்றன. இதில், தங்கப்பதக்கம் வென்ற மகளிர் அணியை சேர்ந்த காரைக்கால், பெருந் தலைவர் காமராஜர் பொறியியல் கல்லுாரி மாணவி வைஷாலி புதுச்சேரி மாநிலத்திலிருந்து முதல் முறையாக பங்கேற்றதால் பதக்கக்கோப்பை அவருக்கு வழங்கப்பட்டது. பதக்கம் வென்ற வைஷாலியை முதல்வர் ரங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தியாகராஜன், புதுச்சேரி அமச்சூர் ரோல் பால் சங்க செயலர் முத்துக்குமரன் ஆகியோர் பாராட்டினர்.