தொழிலாளிக்கு கத்தி வெட்டு மூன்று பேருக்கு போலீஸ் வலை
வில்லியனுார் : தொழிலாளியை கத்தியால் வெட்டிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர். வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் காலனியை சேர்ந்த காளியப்பன் மகன் பிரகாஷ்(எ)அங்காளன்,34;. மரம் வெட்டும் தொழிலாளி, உடன் வேலை செய்யும் பட்டாணிகளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் நண்பர்கள் நேற்று மாலை வில்லியனுார்-பத்துக்கண்ணு சாலையில் உள்ள பாரில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர்.அப்போது போதையில் செல்வத்திற்கும், அங்காளனுக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அதனைத் தொடர்ந்து செல்வம் தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த செல்வம் நண்பர்கள் இருவர், அங்காளனை சராமரியாக தாக்கி கத்தியால் அங்காளன் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பலத்த காயமடைந்த அங்காளனை, அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் பாரில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அங்காளனை தாக்கிய செல்வம் உள்ளிட்ட மூன்று பேர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.