மணல் மூட்டைகளை ‘காணோம்’
புதுச்சேரி மேற்கு பகுதி எல்லையில் பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனப் பிரிவு அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர், பாதுகாப்பு நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளைத் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. தற்போது கனமழை பெய்யும் சூழலில் ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை உடனடியாக சீரமைக்க மணல் மூட்டைகள் தேவைப்படும். அவை தற்போது மாயமாகி வருவதால் அவசர காலங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக அலுவலகத்தில் ஆய்வு செய்து, மணல் மூட்டைகள் எவ்வளவு இருப்பில் உள்ளன, அவை எங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.