| ADDED : நவ 24, 2025 06:53 AM
புதுச்சேரி: உல்லாஸ் திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நேற்று நடந்தது. புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், மத்திய அரசின் நிதியுதவியுடன் உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் 185 கற்றல் மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக கல்வி பயின்றவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு' நேற்று நடந்தது. அதன்படி, புதுச்சேரியில் 102, காரைக்காலில் 61, ஏனாமில் 22 தேர்வு மையங்களில், காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடந்த தேர்வில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தட்டாஞ்சாடி அரசு தொடக்க பள்ளியில் நடந்த தேர்வினை, திட்டத்தின் நோடல் அதிகாரி சுகுணா சுகிர்தபாய், சமக்ர சிக்ஷா திட்ட இயக்குனர் எழில் கல்பனா, பள்ளி துணை ஆய்வாளர் அனிதா பார்வையிட்டனர். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் 'கற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம். வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு சேர்க்கை நடந்து வருகிறது. ஆகையால், திட்டத்தில் சேர அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரை அணுகவும்.