உள்ளாட்சி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுச்சேரி : நகராட்சி மற்றும் கொம் யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவினர், நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி உள்ளாட்சித்துறை அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு கூட்டு போராட்டக்குழு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். கலியபெருமாள், சகாயராஜ், வேளாங்கண்ணிதாசன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், சம்மேளன பிரேமதாசன், கூட்டமைப்பு சேஷாச்சலம், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். காரைக்கால் உள்ளாட்சித்துறை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், உள்ளாட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.