காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் கோவில் அமைந்துள்ளது.அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.இவ்விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை பரமதத்தர் மாப்பிள்ளை ஊர்வலம், நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் -பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது.முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை பிஷாடணமூர்த்தி, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வேதபாராயணங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, காலை 9.00 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை தரித்து, ருத்ராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீடுகளின் மாடிகளில் இருந்து மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மாங்கனிகளை பக்தர்கள் போட்டி போட்டு பிடித்து, எடுத்துச் சென்றனர்.விழாவில் பங்கேற்ற டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், வீடுகளின் மாடியிலிருந்து பக்தர்கள் வீசிய மாங்கனிகளை ஆர்வமாக பிடித்தார்.அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சந்திர பிரியங்கா, நாகதியாகராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில், எஸ்.பி.,க்கள் லட்சுமி சவுஜன்யா, சுப்ரமணியன் உள்ளிட்ட 400க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.