சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ஹதேனாக்களின் முதல் பகுதியான கீழ் மார்பு சுவாசத்துடன் இணைந்த உஷ்ட்ராசனம் மற்றும் ஷஷாசனம் செயல்முறைகளை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் ஆதம் பிராணாயாமம் செயல்முறை வருமாறு: ஆதம் பிராணாயாமம் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கைகளை உடலின் முன்பகுதியான விலா எலும்பின் கீழ் வைத்து, நீண்ட சுவாசம் இழுத்து, அதை தியானித்து உணர்ந்து கைகள் வைத்துள்ள பகுதியில் கவனம் செலுத்தவும். இவ்வாறு ஆறு முறை சுவாசிக்க வேண்டும். பின்பு கைகளை பக்கவாட்டில் வைத்து ஆறு முறை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். கடைசியாக, பின்பகுதியில் கையை வைத்து ஆறு முறை சுவாசிக்க வேண்டும். பின்பு நீண்ட சுவாசம் இழுத்து கீழ் மார்பு முழுவதும், அதாவது முன், பக்கவாட்டு மற்றும் பின்புறம் என மூன்று பகுதிகளிலும் நிரம்பும்படி சுவாசிக்க வேண்டும். கைகளை அதற்கேற்றபடி மாற்றவும். சுவாசத்தை சில வினாடிகள் உள்ளே நிறுத்திக் கொள்ளவும். பின் மேலே கூறிய அதே வரிசையில் வெளியிடவும், சில வினாடிகள் மூச்சை நிறுத்தவும். இவ்வாறு ஒன்பது முறையாவது தொடர்ந்து செய்ய வேண்டும். நடு மார்பு சுவாசத்தை அடுத்த வாரம் பார்ப்போம்...
பயன்கள்
கீழ் மார்பு சுவாசத்தில் ஆதம் பிராணாயாமம் செய்வதன் மூலம் நுரையீரல் பலம் பெறும். முதுகெலும் பு நீட்டி இழுத்து விடும். முதுகெலும்புகள், தசைகள் மற்றும் டையாப்ரம் வலுவடையும். சோலார் ப்ளெக்ஸஸின் நரம்புகள் பலம்பெறும். உடலின் சக்தி கூடும். நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை பலப்படுத்தியும், துாண்டியும் விடுகிறது.