கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் ரூ.10 கோடியில் மினி ஸ்டேடியம்
புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 கோடி ரூபாய் செலவில் மினி ஸ்டேடியம் அமைகிறது.புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விசாலமான இடவசதி உள்ளது. பள்ளி மாணவிகள் விளையாடுவதற்கும் போதிய இடம் உள்ளது. எனவே, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 கோடி ரூபாய் செலவில் மினி ஸ்டேடியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் நிதியை தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, டெண்டர் பணிகளை உழவர்கரை நகராட்சி ஆரம்பித்துள்ளது.இது குறித்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களுக்கு உடல் நலம், மன நலம் உடற்கல்வி மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். எனவே, 300 பேர் அமர்ந்து பார்க்க கூடிய அளவில் கேலரியுடன் இந்த மினி ஸ்டேடியம் அமைய உள்ளது. கபடி கோர்ட் அமைய உள்ளது. உள் அரங்க விளையாட்டுகள் அனைத்துமே விளையாட கூடிய அளவில் இந்த மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவிகள் தங்களது விளையாட்டு திறமைகளை மேம்படுத்தி கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும்' என்றனர்.