மேலும் செய்திகள்
பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு
27-Aug-2025
புதுச்சேரி : தொண்டை மண்டல நாணயவியல் கழகம், புதுச்சேரி வரலாற்று சங்கம் சார்பில் 20ம் ஆண்டு மூன்று நாள் நாணய கண்காட்சி ஆந்திரா மகாசபை திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. தலைவர் கோபிராமன் தலைமை தாங்கினார். வேங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து கோபிராமன் எழுதிய பழங்காசுகளை அறிவோம் என்ற நுாலினை வெளியிட்டார். முதல் பிரதியை பெற்ற டாக்டர் நல்லாம் வாழ்த்தி பேசினார். கல்வித் துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ராமதாசு நுாலினை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தினார். 31ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் 2,500க்கும் மேற்பட்ட சங்ககாலம், பிற்கால சேர, சோழ, பாண்டியர், சாதவாகனர், பல்லவர் கால நாணயங்கள், விஜயநகர பேரரசு, செஞ்சி, மதுரை நாயக்க மன்னர்களின் காசுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆற்காடு நவாபுகள், ைஹதர் அலி, திப்புசுல்தான், மைசூர் உடையார், ைஹதராபாத் நிசாம், திருவாங்கூர், புதுக்கோட்டை, மராட்டியர் காலத்து நாணயங்கள், பிரெஞ்சிந்திய பணத்தாள்கள், தங்கத்தினாலான பணத்தாள்கள், உலகம் முழுதும் வெளி வந்துள்ள அரிய தபால் தலைகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், சோழர்கால உண்டியல்கள், போர்வாள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம்.
27-Aug-2025