அமைச்சர், எம்.எல்.ஏ., நியமனம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்
புதுச்சேரி : புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ., நியமனம் தொடர்பாக கோப்பு ஜனாபதிக்கு இன்று ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. கட்சி மேலிடத்தின் உத்தரவின்படி புதுச்சேரி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27 ம்தேதி ராஜினாமா செய்தனர். அமைச்சர் சாய்சரவணன்குமாருக்கு பதிலாக ஜான்குமாரை அமைச்சராக நியமனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதேபோல், புதிய நியமன எம்.எல்.ஏ.,க்களாக செல்வம், தீப்பாஞ்சான், ராஜசேகரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த இரண்டு நியமனங்களுக்கும் நேற்று மத்திய அரசு அனுமதி அளித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ஒப்புதல் கிடைக்கவில்லை.பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இரண்டு நியமன கோப்புகளுக்கும் அனுமதி கேட்டு இன்று 1ம் தேதி ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகிறது.