தோல்வியை அனுபவமாக கொண்டு மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை
புதுச்சேரி: புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில், நீட் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா ஜீவானந்தம் அரசு பள்ளியில் நடந்தது.இணை இயக்குனர் சிவகாமி வரவேற்றார். ஜான்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வாழ்த்தி பேசினர். நீட் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ராஜவேலு நன்றி கூறினார்.பயிற்சி வகுப்புகள் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2 மையங்கள், வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதகடிப்பட்டு கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 1 மையம் என மூன்று பள்ளிகளில் 4 மையங்கள் அமைக்கப்பட்டது.விழாவில், நீட் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து, அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:தனியார் பள்ளி மாணவர்களோடு அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போடுவது சிரமமாக இருக்கும் என்பதால், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு விரைவில் பேக், ஷூ வழங்கப்படும்.மாணவிகளின் சீருடையை மாற்றி, பாதுகாப்பான ஓவர் கோட் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளியில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தவும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். தோல்வி அடைந்து விட்டேன் என்று மனரீதியாக எண்ணினால் நம்மால் வெற்றி பெற முடியாது. தோல்வியை அனுபவமாக எடுத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நம்மை நாமே மாற்றி கொள்ள வேண்டும்' என்றார்.