கோதுமை வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூர்: பாகூர் தொகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதாந்தோறும் தலா 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி கடந்த சில தினங்களுக்கு முன், துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பாகூரில் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக இலவச கோதுமை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பாகூர் தொகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு மாதத்திற்கு 2 கிலோ வீதம், 2 மாதத்திற்கு சேர்த்து மொத்தம் 4 கிலோ கோதுமை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொது மக்கள் உடனிருந்தனர்.