உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக... ரூ.66 கோடி ஒதுக்கீடு; இனி அனைத்து பகுதிகளிலும் பூமி பூஜை களை கட்டும்

எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக... ரூ.66 கோடி ஒதுக்கீடு; இனி அனைத்து பகுதிகளிலும் பூமி பூஜை களை கட்டும்

புதுச்சேரி : நியமன எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 33 எம்.எல்.ஏக்களுக்கு 66 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகளை கண்டறிந்து, அதை தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்திட பரிந்துரை செய்து, நிதி ஒதுக்கீடு செய்வர். பெரும்பாலும் தொகுதியில் சாலை, வடிகால் வாய்க்கால், சிறிய அளவிலான கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்படுகிறது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு, எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி ஆட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் 2023-24ம் ஆண்டிற்கான முதற்கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியாக 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக தற்போது 33 எம்.எல்.ஏ.,க்களுக்கும் 2023-24 ம் ஆண்டில் இரண்டாம் கட்டம் மற்றும் இறுதி கட்டமாக ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த நிதியாண்டிற்கும்(2024-25) முதற்கட்டமாக 77 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ., விற்கு தற்போது 2 கோடி ரூபாய் வீதம் அரசு 66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. 2023-24ம் ஆண்டிற்கான முதற்கட்ட தொகுதி மேம்பாட்டு நிதி 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், லோக்சபா தேர்தல் காரணமாக, அந்த நிதியில் உடனடியாக மேம்பாட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.பல தொகுதிகளில் இப்போது தான் அந்த நிதியில் பணிகள் துவங்க உள்ளன. இப்போது, மேலும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகளும் உற்சாகமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ளது. இந்த ஒன்றரை ஆண்டிற்குள் எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய தொகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.எனவே அனைத்து பகுதிகளிலும் சாலை, கழிவு நீர் வாய்க்கால் முன்னுரிமை கொடுத்து பணிகளை முழு வீச்சில் துவங்க ரெடியாகி வருகின்றனர். இனி,அனைத்து தொகுதிகளிலும் சாலை பணிக்கான பூமி பூஜைகள் களை கட்ட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை