இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில இ.எஸ்.ஐ., மாநில குழு உறுப்பினர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் 1975ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1978ம் ஆண்டு முதல் இ.எஸ்.ஐ., மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 4.5 லட்சம் இ.எஸ்ஐ உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்காக இ.எஸ்.ஐ கார்பரேஷன் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் மாநில அரசின் சார்பில், செலவு செய்வதுடன், தேவையான மருந்து வாங்கி கொடுத்து வருகிறது.நாட்டில், மாதிரி மருத்துவமனை இல்லாத ஒரு மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இ.எஸ்.ஐ., கார்பரேஷன் 1915ம் ஆண்டு அனுமதி அளித்தது. ஆனால் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாதததால் காலம் கடந்தது. எங்களின் தொடர் நடவடிக்கையால் கடந்த 2018 ம் ஆண்டு புதுச்சேரி அமைச்சரவை, கவர்னர் மாதிரி மருத்துவனைக்கு ஒப்புதல் அளித்தனர்.இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால் உள்நோயாளிகள் அனுமதிக்கபடாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.வசதி இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற முடியவில்லை. எனவே இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை கட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.சந்திப்பின்போது, உறுப்பினர்கள் ரத்தினவேலு, ராஜேஷ்பாபு, ஆசைதம்பி, முன்னாள் உறுப்பினர் சுரேஷ்பாபு உடனிருந்தனர்.