பழைய நாணயங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி நுாதன மோசடி
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 55, இவரது பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் ஒரு நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் உங்களிடம் என்னஉள்ளது என கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் 50 வருடத்திற்கு முந்தைய 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தான என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் எதிர் தரப்பினர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ. 4 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, அதற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. ஆயிரம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளனர். அவர்கள் கூறிய பணத்தை ராஜேஷ் அனுப்பி வைத்துள்ளார். பின் ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஷ் ரூ. 35 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன்பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.