சாலையில் தவறவிட்ட பணம் போலீசில் ஒப்படைப்பு
புதுச்சேரி: முதலியார்பேட்டை, காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ சவுந்தரி, 43. இவர், காமராஜர் சாலையில் உள்ள பிஸ்மில்லா ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று மாலை 4:00 மணியளவில், ஓட்டலில் இருந்து வீட்டிற்கு நடந்து வரும்போது, காமராஜ் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதை பார்த்துள்ளார். அதை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் பணம் இருந்தது. அதையடுத்து ராஜசவுந்தரி உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் நிலையத்தில் அந்தப் பையை சோதித்துப் பார்த்தபோது அதில், 33 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பையில்ரசீது ஒன்றும் இருந்தது. அதன்படி, பணத்திற்கு உரியவரான குருசுக்குப்பத்தைச் சேர்ந்தசெந்தில்குமார், 47, என்பவரை போலீசார் வரவழைத்து ஒப்படைத்தனர். பணத்தினை நேர்மையுடன் போலீஸ் நிலையத்தில் எடுத்து வந்து ஒப்படைத்த ராஜ சவுந்தரியை எஸ்.பி., கிழக்கு ஈஷா சிங் சால்வை அணிவித்து கவுரவித்தார்.