மூகாம்பிகை நவராத்திரி வைபவம்
புதுச்சேரி: புதுச்சேரி - விழுப்புரம் மெயின் ரோடு மூகாம்பிகா பேச்சு கேப்பியல் மறுவாழ்வு கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் கியூர் காது கருவிகள் பேச்சு கிளினிக் சார்பில், மூகாம்பிகை நவராத்திரி வைபவம் புதுச்சேரியில் நடந்தது. டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றார். டாக்டர் அனுஷா முத்துக்குமரன் நன்றி கூறினார். இந்த நவராத்திரி வைபவம் ‘ஒவ்வொரு குழந்தையையும் கொண்டாடுவோம், ஒவ்வொரு திறனையும் மதிப்போம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, அறக்கட்டளையின் ‘100 விஷனரீஸ் பார் ரீஹாபிலிட்டேஷன்’ என்ற முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம், குழந்தைகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உரிய மதிப்பீடு மற்றும் சிகிச்சைச் சேவைகளைப் பெற வழிகாட்டுதல், பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஆதரவு திரட்டுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக, 9 சக்திகளைக் குறிக்கும் வகையில் 9 பெயர்கள் முன்னிறுத்தப்பட்டன. அவை, செவித்திறன், தகவல் தொடர்பு, கல்வி, இயக்கம், திறன், புரிதல், உள்ளடக்கம், கருணை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. பள்ளி ஆசிரியர்களுக்காக குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் மற்றும் வளர்ச்சித் தாமதங்களை ஆரம்பத்திலேயே கண்டறிதல் குறித்த இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சியில் காணப்படும் சிரமங்களை ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே கவனித்து, பெற்றோர்கள் உரிய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வழிகாட்ட முடியும். இதற்காக, கல்வியாளர்கள், மருத்துவர்கள், மறுவாழ்வு நிபுணர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் இணைந்து செயல்பட அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.