உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் ஓட்டிகள் தரமான ஹெல்மெட்டை சரியாக அணிந்து செல்ல அறிவுறுத்தல்

பைக் ஓட்டிகள் தரமான ஹெல்மெட்டை சரியாக அணிந்து செல்ல அறிவுறுத்தல்

புதுச்சேரி: பைக் ஓட்டிகள் தரமான ஹெல்மெட்டை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சீனியர் எஸ்.பி., திவ்யா செய்திக்குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்து போலீசாரின் தொடர் முயற்சிகள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஹெல்மெட் அணிவது மட்டுமே முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாது. ஹெல்மெட் தரமானதாகவும், தலையில் சரியாக பொருந்தக்கூடியதாகவும், அதன் பட்டை முறையாக பூட்டப்பட்டு இறுக்கமாக கட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். சமீபத்தில் நடந்த விபத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த கல்லுாரி மாணவர் ஒருவர், அதன் கழுத்து பட்டையை முறையாக பூட்டாத காரணத்தால் காயமடைந்துள்ளார். எனவே, பைக் ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தரமான நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யும் ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்பட்ட ஹெல்மெட்டை எப்போதும் அணிய வேண்டும். ஹெல்மெட் தலையில் சரியாக பொருந்துவதையும், தலையை முழுமையாக பாதுகாக்கும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பைக் வாகனத்தை இயக்குவதற்கு முன் ஹெல்மெட்டின் கழுத்து பட்டையை முறையாக பூட்டி, இறுக்கமாக கட்ட வேண்டும். பட்டை பூட்டப்படாத ஹெல்மெட் விபத்தின்போது தலையிருந்து கழன்று, தலையில் காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பயணிக்கும் துாரத்தைப் பொருட்படுத்தாமல், பைக் ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர் ஒவ்வொரு பயணத்தின்போதும் ஹெல்மெட்டை முறையாக அணிய வேண்டும். எனவே, தரமான ஹெல்மெட்டை சரியான முறையில் அணிந்து, அதன் பட்டையை இறுக்கமாக பூட்டும்போது மட்டுமே அது பாதுகாப்பு கவசமாக அமையும். ஆகையால், ஹெல்மெட்டை முறையாக அணிவதை அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்வதுடன், குடும்பத்தினர், நண்பர்களுக்கு சாலை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !