தினசரி டிராபிக் ஜாம் வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் தினசரி ஏற்படும் டிராபிக் ஜாம் பிரச்னையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.புதுச்சேரி நகரின் மிகப்பெரிய பிரச்னை பார்க்கிங். நகர வீதியில் உள்ள 99 சதவீத வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி கிடையாது. பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர் கார், பைக்குகள் சாலையில் நிறுத்த வேண்டும். நகர சாலைகள் அதிகபட்சம் 40 அடி அகலம் கொண்டது. இதில் தள்ளுவண்டி, பெட்டி கடை ஆக்கிரமிப்பு, கார், வேன்கள் நிறுத்தியது போக மீதி, 15 முதல் 20 அடி அகல சாலை மட்டுமே இருக்கும். சுருங்கிய இச்சாலைகளால் வாகன ஒட்டிகள் தினசரி டிராபிக் ஜாமில் சிக்கி படாத பாடு படுகின்றனர். வாகனங்கள் 10 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல முடியாமல், ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக புஸ்சி வீதி, மிஷன் வீதி, காந்தி வீதிகளில் நாள் முழுதும் டிராபிக் ஜாம் நிலவுகிறது. மிஷன் வீதி ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் நாள் முழுதும் நிறுத்தி வைக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களால் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வருகிறது. சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, சீரான வாகன போக்குவரத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.