கலிதீர்த்தாள்குப்பத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அங்காளன் எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு
திருபுவனை,: கலிதீர்த்தாள்குப்பத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன், முதல்வர் ரங்கசாமியை நேற்று நேரில் சந்தித்து, அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருபுவனை தொகுதி கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக பலர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் இறந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.குறிப்பாக, இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கான காரணத்தை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக சிறப்பு மருத்துவ குழுவினரை அனுப்பி, மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். சித்த மருத்துவம் மூலம் கபசுர குடிநீர் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.