மேலும் செய்திகள்
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
27-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அம்மாநில அமைச்சர் ஒருவர் பின்னணியில் இருப்பதாக, கொலை செய்யப்பட்டவரின் தந்தை அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி, சாமிபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர், 38; காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர். தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரிஸ் திருமண நிலையத்தில் நேற்று கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை உமாசங்கர் கவனித்தார்.நேற்று முன்தினம் இரவு, விழா ஏற்பாடுகளை பார்த்துவிட்டு, இரவு 11:45 மணியளவில் உமாசங்கர் வெளியே வந்த போது, அங்கு ஐந்து பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், உமாசங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.லாஸ்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டனர். கொலை காரணமாக கருவடிக்குப்பத்தில் பதற்றம் ஏற்பட்டது. உமாசங்கர், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு உபகரணங்களை கொண்டு விளையாட்டு முகாம் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இதே தொழிலை செய்து வரும் மற்றொரு கும்பலுடன் தொழில் போட்டி இருந்துள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, உமாசங்கரின் தந்தை காசிலிங்கம், லாஸ்பேட்டை போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'என் மகன் கொலை பின்னணியில், புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.இந்த புகாரை மறுத்து அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னையும், என் குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கில் பொய் செய்தி பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. 'இதை பரப்புவோர் மீதும், குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்' என, தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக, சந்தேகத்தில் 11 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Apr-2025