கடற்படை தளபதி முதல்வருடன் சந்திப்பு
புதுச்சேரி: இந்திய கடற்படை தளபதி நேற்று, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்திய கடற்படையில் அக்னி வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக சேர்வதற்கு ஊக்கமளிக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கடற்படை தளபதி எடுத்துரைத்தார். அப்போது, இந்திய கடற்படையின் ஆட்சேர்ப்பு அதிகாரியான கமாண்டர் செந்தில் மற்றும் கடற்படை முன்னாள் வீரர்கள் உடனிருந்தனர்.