ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை சோதனை நடத்திட நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:மக்களின் வாழ்வியல் மாற்றம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓட்டல்களில் சாப்பிடுவது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஓட்டல், இறைச்சி கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்து கெட்டுப் போன உணவு பொருட்கள், இறைச்சி மற்றும் ரசாயனம் பயன்படுத்திய பழங்களை பெனாயில் ஊற்றி அழிப்பது வழக்கம். தற்போது இதனை நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.இதனால், ஓட்டல்கள் மற்றும் துரித உணவங்களில் சுவை மற்றும் நிறத்திற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். மேலும், காலாவதியான உணவை கொட்டி அழிக்காமல், பிரிட்ஜில் வைத்து மறுநாள் விற்பனை செய்கின்றனர். ஆடு, மாடுகளை பட்டிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் பரிசோதித்த பிறகே வெட்டி, இறைச்சியில் நகராட்சி முத்திரையிட்டு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதுவும் தற்போது பின்பற்றாததால், நோய்வாய்பட்ட மற்றும் இறந்த கால்நடைகள் மற்றும் கோழிகள் இறைச்சியாக்கி விற்கப்படுகிறது. அதேபோன்று மாங்காய், வாழை, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்கவும், நீறமூட்டவும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இதுபோன்ற ரசாயனங்கள் மற்றும் கெட்டு போன உணவு, இறைச்சி மற்றும் பழங்களை சாப்பிடும் மக்கள் பல்வேறு நோயிற்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.. இதனை கருத்தில் கொண்டு ஓட்டல்கள், இறைச்சி கடைகள் மற்றும் பழக்கடைகளை ஆய்வு செய்ய போதுமான உணவு கட்டுப்பாடு அதிகாரிகளை நியமித்து கலப்பட மற்றும் காலாவதி உணவு விற்பனை தடுக்க வேண்டும். நகராட்சியில் உள்ள சுகாதார பிரிவில் தற்போது கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அங்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.