உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ மாணவர்களின் மனநலனுக்காக ஜிப்மரில் புதிய மையம் அமைப்பு

மருத்துவ மாணவர்களின் மனநலனுக்காக ஜிப்மரில் புதிய மையம் அமைப்பு

புதுச்சேரி: மருத்துவ மாணவர்களின் மனநலனுக்காக ஜிப்மரில் புதிய மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுதும் மாணவர்களின் மன நலனை பேணும் வகையில் அண்மையில் சுப்ரீம் கோர்ட் தேசிய பணிக்குழுவை நியமித்தது. இக்குழு மாணவர்களின் மனநலன் சார்ந்த பல்வேறு அம்சங்களை உறுதிசெய்து வருகிறது. அதன்படி, ஜிப்மர் நிர்வாகம், மாணவர்களின் மனநலனை முன்னிறுத்தி, ஆண்டு முழுதும் விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளை நடத்துவதோடு அதற்கான கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறது. தற்போது ஜெ-கேர்ஸ் செல் என்ற பெயரில் மாணவர்களின் மனநலனுக்கான பிரத்யோகமான மையம் ஜிப்மர் துவக்கியுள்ளது. இந்த மையத்தில், ஜிப்மரில் பயிலும் இளநிலை முதுநிலை மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய மனநல ஆலோசனையும் வழங்க உள்ளது. ஆரோக்கியமான மனநலனை உருவாக்கும் ஒரு இணக்கமான சூழலை நிர்வகிக்கும் மையமாகவும் திகழும். இம்மையம் குறித்து ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறியதாவது: இம்மையத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியர்களை மற்றும் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்வி துறையின் கீழ் இக்குழு செயல்படும். தேவையான பயிற்சி மற்றும் கட்டமைப்புகளையும் இக்குழு மூலம் ஜிப்மர் செயல்படுத்தப்படும். முறையாக பயிற்சிப் பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். உடன் பயிலும் மாணவர்களுக்கிடையே இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதை அடிப்படையாக கொண்டும் இம்மையம் செயல்படும். ஜிப்மர் மருத்துவ மாணவர்கள் தங்களது பிரச்னைகளுக்கு இ-மெயில், புகார்பெட்டி, மொபைல்போன் பல்வேறு வழிமுறைகள் மூலம் இம்மையத்தை எந்நேரமும் எளிதாக அணுகமுடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !