புதுச்சேரி த.வெ.க.,விற்கு புதிய நிர்வாக குழு நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில த.வெ.க.,விற்கு 30 பேர் அடங்கிய புதிய நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, புதுச்சேரியில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர். இருப்பினும், கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், யார் தலைமையில் செயல்படுவது என தெரியாததால், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தேர்தல் பணியில் ஆர்வமின்றி மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் ஒப்புதலுடன், சையத் முகமது காசிம், புதியவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், அசனா, பெரியசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஜி., சந்திரன், வலந்தன், நிரேஷ்குமார், ராமு, மணிபாலன், பிரதீபன், பிரபு, ராஜசேகர், சந்திரசேகரன், சத்யா, செந்தில்குமார், வசந்தராஜா, சரவணன், சந்திரபாலன், யூசப், வேல்முருகன், விஜி, சுகுமார், பாரதிதாசன், பிரான்சிஸ், கிளார் பேட்ரிக், மணிகண்டன், குமரவேல், பாலாசுதாகர், பிரிஜேஷ் ஆகிய 30 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை பொதுச் செயலாளர் ஆனந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து த.வெ.க., தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக குழுவினருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், வரும் சட்டசபை தேர்தலுக்கு தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.,விற்கு பொதுச் சின்னமாக 'விசில்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.