காவல் துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்பப்படும்: நமச்சிவாயம்
புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் பலர் கலந்து கொண்டனர். பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், கடந்த கூட்டத்தில் 60 நாட்களில் 19 சதவீத குற்றங்களுக்கு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இன்றைக்கு 98 சதவீத குற்றங்களுக்கான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களில் தொடர்ந்து கொலைகள் நடந்துள்ளது. இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ரெஸ்டோபார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டம் எல்லோர் மீதும் போட்டுவிட முடியாது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது தான் குண்டர் சட்டம் போட முடியும். இதுவரை 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. தற்போது புதிய மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், யார் எல்லாம் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு அவர்களை நேரடியாக பதிவு செய்து, அவர்களின் இருப்பிடத்தை, தகவல் மையத்திற்கு அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம். தீபாவளி பண்டிகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது. காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம். ஒரு வார காலத்திற்குள் சீனியாரிட்டி அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வு வழங்கப்படும். புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பியுள்ளோம்.882 ஐ.ஆர்.பி.என்., போலீசார் உள்ளனர். இரண்டாவது ஐ.ஆர்.பி.என்., யூனிட் தேவை என, மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்' என்றார்.