வெளி நாடுகளுக்கு தபால் துறை பார்சல் அனுப்புவதில் புது சிக்கல்
தபால் துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல் சேவையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.இந்திய தபால் துறை மூலம் நம் நாட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு பார்சலில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுப்பினால் அதை சேவை ரீதியாக எடுத்துக் கொள்ளாமல், வணிக ரீதியாக கருதப்படும் என, பல நாடுகள் சர்வதேச தபால் துறை அமைப்பிற்கு தற்போது தெரிவித்துள்ளன.உதாரணத்திற்கு, உங்களின் உறவினர் ஒருவர் பிரான்சில் இருக்கிறார். அவருக்கு நீங்கள் தபால் துறை பார்சல் மூலம் மூன்று சட்டைகள் அனுப்புகிறீர்கள். இதில் இரண்டு சட்டைகள் மட்டுமே சேவையாக கருதப்படும். மூன்றாவது சட்டை வணிக ரீதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக கருதப்படுகிறது.இதனால் பார்சல் அனுப்புவோர் ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள் ஐ.இ.சி., பதிவு எண் மற்றும் ஜி.எஸ்.டி., வரிகளுக்கு செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் அந்தப் பார்சலில் இருக்க வேண்டும்.இந்த ஆவணங்கள் இல்லையெனில் அந்த பார்சல் டெலிவரி செய்யப்படாமல் உடனடியாக திருப்பி அனுப்பப்படும். இதற்கு ஆகும் சேவை கட்டணங்களை செலுத்திய பின்பே பார்சல் அனுப்பியவருக்கு பொருள் திரும்ப ஒப்படைக்கப்படும்.இந்தியாவில் இருந்து பார்சல்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவதுடன், அன்னிய செலாவணி வருவாயும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள் இதுபோன்ற பார்சல்களை தடை செய்து வருகின்றன.புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலம் அனுப்பப்பட்ட சில பார்சல்கள் இது போன்ற பிரச்னையில் திருப்பி அனுப்பப்பட்டதால் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது.