புதுச்சேரி உப்பனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புது திட்டம்: ஆயத்த பணிகளில் பொதுப்பணித் துறை தீவிரம்
புதுச்சேரி: புதுச்சேரி உப்பனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ரெடியாகி வருகிறது.புதுச்சேரியின் கூவம் என்றால் அது உப்பனாறு தான். பெயரில் தான் ஆறு இருக்கின்றதே தவிர ஆற்றுக்கான அடையாளத்தை ஏற்கனவே இழந்துவிட்டது. இப்போது சாக்கடையாக மாறி பயங்கர துர்நாற்றம் வீசுகின்றது. உப்பனாறு சாக்கடையாகவே தோன்றி சாக்கடையாகவே கடலில் கலக்கும் ஆறு. இதில் என்ன பெருமை இருக்க போய்கிறது என்று இன்றைய தலைமுறையினருக்கு கேள்வி எழுப்பலாம்.புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வியலோடு இந்த ஆறு, பிரெஞ்சியர் காலத்தில் புதுச்சேரி மண்ணுக்கு உயிரூட்டியது. நகரில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை சிந்தாமல் கடலில் கொண்டுபோய் சேர்த்து மழைக்காலங்களில் புதுச்சேரி மக்களை காப்பாற்றியது. மழை நாளில் வெள்ள நீர் ஓடும். பின்னர் வெயில் நாள் முழுதுமே கானல் நீர் ஓடும். சில நேரங்களில் சிற்றோடையாகவும் ஓடி சலசலக்கும். நாகரீக வளர்ச்சியில் எல்லா ஆறுகளுக்கும் நேர்ந்த கதி தான் உப்பனாற்றிற்கு இப்போது நேர்ந்து, சாக்கடை ஓடும் ஆறாக தனது அடையாளத்தை இழந்து பரிதாபமாக நிற்கின்றது. பெருமை வாய்ந்த உப்பனாற்றினை மீட்டெடுக்கும் விதமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து, பொதுப்பணித் துறை வாயிலாக பலே திட்டத்தை ரெடி செய்து வருகின்றது. உப்பனாற்றின் பெரிய எதிரியே கனகன் ஏரி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம். கனகன் ஏரியையொட்டி அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தற்போது 17 எம்.எல்.டி., கழிவு நீரை அருகில் உள்ள வாய்க்கால் மூலம் வெளியேற்றி உப்பனார் வாய்க்காலில் விடப்படுகின்றது. இதை முற்றிலும் தடுக்கும் விதமாக தற்போது ஒரு திட்ட மதிப்பீடு ரூ.30.60 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டினை அனுமதி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட 17 எம்.எல்.டி., கழிவு நீரை கழிவு நீரை அரியாங்குப்பம் ஆற்றில் வெளியேற்ற திட்டமிடபட்டுள்ளது. இப்பகுதிகளில் வீடுகளில் கழிவு நீர் பாதாள சாக்கடை கணக்கிடும் பணி முடிந்துள்ளது. இதன் மூலம் இதுவுரை பாதாள சாக்கடை இணப்பு கொடுக்காத வீடுகளில் இணைப்பு கொடுப்பதற்கான பூர்வாங்க பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடையும்போது உப்பனாறில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.இது மட்டுமின்றி உப்பனாறு வாய்க்காலில் இருபுறமும் இடைமறிப்பு, திசை திருப்புதல் கழிவு நீர் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் துப்புராயப்பேட்டை கழிவு நீர் தொட்டியில் தொடக்க புள்ளியில் இருந்து சங்கமிக்கும் இடம் வரையிலும் உப்பனாறு வாய்க்காலில் இருபுறமும் கான்கிரிட் லைன் பலமாக ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் கழிவு நீரை குழாய் வழியாக கடலில் கலக்கும் வகையில் ரூ.51.70 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து நிரந்தர தீர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது. கழிவு நீரை நிலத்தடி குழாய் வழியின் மூலமாக திருப்பி விடும் திட்டத்திற்கு அரசு அனுமதி தந்துவிட்டது. எனவே தேசிய அவுஸ்சிங் வங்கி மூலம் கடன் பெறுவதற்கு ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் வரும் நிதியாண்டிலேயே மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கழிவு நீர், நீர் நிலை வடிகால் வாய்க்காலில் கலக்காமல் இருப்பதற்கு விடுபட்ட இடங்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் செயல்படுத்த திட்டமிடபட்டுள்ளது. இந்த திட்டங்கள் முழு செயல்பாட்டிற்கு வரும்போது உப்பனாறு புது பொலிவு பெறும்.