நிதின் கட்கரி புதுச்சேரி வருகை சாலை, மைதானம் சீரமைப்பு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் மத்திய அமைச்சருக்காக லாஸ்பேட்டை கல்வி சதுக்கம், கொக்கு பார்க்கும் மைதானம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி கொக்கு பார்க் மைதானத்தில் நடைபெற உள்ள 100 அடி ரோடு மேம்பால பணி அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரிக்கு வருகிறார். விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வரும் நிதின் கட்கரி அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வருகிறார். அதையொட்டி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, கல்வி சதுக்க வளாகம், கருவடிகுப்பம் சிங்கம் பார்க் எதிரில் உள்ள வாய்க்கால் பாலம், கொக்கு பார்க் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு அழகு படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.