| ADDED : அக் 25, 2024 06:26 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில், போக்குவரத்து நெருக்கடி தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையோரங்களில் வியாபாரிகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் கால்வாய் மற்றும் சாலை பகுதியை ஆக்கிரமித்து பெயர் பலகைகள் வைத்தும், வியாபார பொருட்களை அடுக்கி வைத்தும், கடையின் அளவை நீட்டித்து அமைத்தல் போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில், வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ்துறை இணைந்து, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எல்லைப்பிள்ளை சாவடி முதல் மூலக்குளம் வரை ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரங்களில் உள்ள பெயர் பலகைகள், வியாபார பொருட்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரெட்டியார்பாளையத்தில் உள்ள கடைகளில் சுத்தப்படுத்தும் குப்பைகளை தொட்டியில் கொட்டாமல் சாலை ஓரத்தில் குவித்து வைத்திருந்ததால், அந்த கடைகளுக்கும், அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இன்னும் இரு தினங்களுக்குள், ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்றும் தவறினால், நகராட்சி நிர்வாகம் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டது.