பத்துக்கண்ணு சாலையில் திக்... திக்... பயணம்; இப்ப விழுமோ... எப்ப விழுமோ
புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டட பிரிவு வடக்கு கோட்டம் சார்பில், வில்லியனுார் முதல் பத்துக்கண்ணு வரையில் 6 கி.மீ., துாரம் கொண்ட இந்த சாலையின் இருபுறத்தையும் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையாக அமைத்து கொடுத்தனர்.இந்நிலையில் வில்லியனுார் முதல் பத்துக்கண்ணு வரை சாலையோரம் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து சாலைக்கு அழகு சேர்த்துள்ளது. இதில் சேந்தநத்தம், உளவாய்க்கால், கூடப்பாக்கம், பத்துக்கண்ணு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் இருந்த சீமை வாகை மரங்கள் பட்டுப்போய் உள்ளன.மழை மற்றும் காற்று பலமாக வீசினால் பட்ட மரத்தில் உள்ள காய்ந்த கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து வருகின்றன. இதனால் பத்துக்கண்ணு சாலையில் இருசக்கரம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே, இந்த சாலையில் பட்டுப்போன சீமைவாகை மரங்களை வெட்டி அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.