சைபர் குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசாருக்கு போகும் முன்பே பயணப்படி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
புதுச்சேரி: சைபர் குற்றவாளிகளை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும் போலீசாருக்கு பயணபடியை முன்கூட்டியே வழங்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, மோசடியும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆஷ்பே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த புதுச்சேரியை சேர்ந்த பலர் கோடி கணக்கில் பணத்தை இழந்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்ய துாண்டுதலாக இருந்த நடிகைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை பணம் திரும்ப தரப்படவில்லை. விரைந்து அவர்களுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.சைபர் வழக்குகளில் வெளி மாநில குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசாருக்கு, முன்கூட்டியே போக்குவரத்து பயணபடியை அரசு வழங்க வேண்டும்.கடந்த பட்ஜெட்டில் சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை வாங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், தொழில்நுட்ப உபகரணங்கள் ஏதுவும் இதுவரை வாங்கப்படவில்லை. இதனால், சைபர் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவும், அவர்களிடம் இருந்து பணத்தையும் உடனடியாக மீட்கவும் முடிவதில்லை.எனவே, விரைந்து சைபர் கிரைமிற்கு தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வாங்கி தரவும், சைபர் கிரைம் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.