ரூ.1,000, 2,500 அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகள் கலக்கம்; முதல்வர் ரங்கசாமியின் ராஜதந்திரம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்த மகளிர் உதவித்தொகை அறிவிப்பால் எதிர்க்கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறிவைத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து வருகிறார்.அதன்படி, அரசின் எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 1,000 ரூபாய், ஏற்கனவே சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 1,000ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அதனை 2,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என, சட்ட சபையில் கடந்த 19ம் தேதி, முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை கேட்டும் மற்றும் தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டுகளை சிவப்பாக ஆக மாற்றவும், அல்லது ரேஷன் கார்டுகளை தனித்தனி குடும்பமாக பிரிக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.ஏற்கனவே 2,438 அரசு பணியிடங்கள் நிரப்பியது, விபத்தில் காயம் அடைபவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் விபத்து காப்பீடு, முதியோர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை உயர்வு, ரேஷன் கடைகளில் இலவசமாக கோதுமை, சர்க்கரை என பெண்களை குறி வைத்தே முதல்வர் ரங்கசாமி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.இந்த புதிய அறிவிப்புகள் எதிர்க்கட்சிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. கடந்த எம்.பி., தேர்தலில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்ற கோஷத்தை முன்வைத்தே வைத்திலிங்கம் எம்.பி., வெற்றியை தட்டி சென்றார்.வரும் சட்டசபை தேர்தலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, அறிவிப்புகள் பெண்களின் ஓட்டுக்களை கணிசமாக முதல்வருக்குசாதகமாக திரும்பிவிடும் என்பதால், இதனை எப்படி சமாளிப்பதுஎன புரியாமல் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.