6 முதல் 59 வயதுடையோர் உறுப்புகள் தானம்; 25 பேர் பயனடைந்தனர்
மூளை சாவு அடைந்த பிரேம்குமார் என்ற வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் ஏழு பேர் பலன் பெற்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக உடல் உறுப்புகள் தேவை அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை மத்திய சுகாதாரம் அமைச்சகம் மேற்கொண்டு வருவதால் பலர் பயனடைந்து வருகின்றனர். உடல் உறுப்புகள் தேவைக்காக நாடு முழுதும் 5 லட்சம் பேர் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பில் பதிவு செய்து தற்போது காத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.இதே போன்று புதுச்சேரியில் உள்ள மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பில் கிட்னி, லிவர், கருவிழிகள் உள்ளிடவைக்களுக்காக பலர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு 6 வயது சிறுவன் முதல் 59 வயது பெண் வரை புதுச்சேரியில் ஆறு பேர் கொடுத்த உடல் உறுப்புகள் தானத்தால் 25 பேர் பலனடைந்துள்ளனர். இதில் யுனேஷ், 6, என்ற சிறுவனின் இரண்டு கிட்னி, கருவிழிகள் ஜிப்மர் மருத்துவமனையில் நான்கு பேருக்கு வழங்கப்பட்டது. கவிமணி, 28, என்பவரின் ஒரு கிட்னி ஜிப்மரில் ஒருவர், ஒரு கிட்னி, லிவர் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் இருவருக்கு கிடைத்தது. பாலாஜி 42, என்பவரின் இருதயம், லிவர் சென்னை ரேலா மருத்துமனையில் இருவர், இரண்டு கிட்னி, இரண்டு கருவிழிகள் ஜிப்மர் மருத்துவமனையில் நான்கு பேருக்கு கிடைத்தது. நடராஜன் 41, என்பவரின் ஒரு கிட்னி ஜிப்மரில் ஒருவர், ஒரு கிட்னி, லிவர் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் இருவருக்கு கிடைத்தது.உமா 46, என்ற பெண்ணின் இருதயம் சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனையில் ஒருவர், இரண்டு நுரையீரல்கள் காவேரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கும், இரண்டு கிட்னி, இரண்டு கருவிழிகள் ஜிப்மரில் நான்கு பேருக்கு வழங்கப்பட்டது. ஜோதி, 59, என்ற பெண்ணின் லிவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒருவர், இரண்டு கிட்னி, இரண்டு கருவிழிகள் ஜிப்மரில் நான்கு பேருக்கு வழங்கப்பட்டது. ஆறு பேர் வழங்கிய உடல் உறுப்புகளால் 25 பேர் பலனடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி இரு கருவிழிகளை நான்கு பேருக்கு பொருத்தும் நவீன முறையும் தற்போது உள்ளதால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கை கூடும்.