பான்சியோனோ பெண்கள் பிரெஞ்சு பள்ளிக்கு புத்துயிர்! ரூ.9 கோடியில் கட்டடம் கட்ட மீண்டும் டெண்டர்
புதுச்சேரி; புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் உறவுபாலமாக திகழும் பான்சியோனோ பெண்கள் பிரெஞ்சு பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் மீண்டும் கட்டி எழுப்பப்பட உள்ளது.புதுச்சேரியின் மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்று துாய்மா வீதியில் உள்ள பான்சியோனா பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி. கடந்த 1827ல் துவங்கப்பட்ட இந்த பிரெஞ்சு பள்ளியில் வெள்ளைக்கார குழந்தைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1829ல் இருந்து உள்ளூர் பெண் குழந்தைகளையும் சேர்க்க துவங்கினர்.அரசுப் பள்ளியான இதை 1903 வரை பிரான்சு நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அருட் சகோதரி கள் ஏற்று நடத்தினர். பின்னர் அதை மதம் சாரா பள்ளியாக மாற்றி அரசே நடத்தத் துவங்கியது.இப்பள்ளிக்கு சொந்த மாக துய்மா வீதியில் இருந்த பள்ளி கட்டடம் காலவெள்ளத்தில் பலம் இழந்து பலவீனமானது. அதையடுத்து மாதாகோயில் வீதியிலுள்ள கர்தினால் லுார்துசாமி பெண்கள் பள்ளிக் கட்டடத்தில் 246 மாணவிகளோடு இயங்கி வருகிறது.இப்பள்ளியை மீண்டும் கட்டி எழுப்ப கடந்த 2023ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகளும் துவங்கியது. பேஸ்மட்டம் வரை கட்டடத்திற்கான அடிப்படைத்தளமும் எழுப்பப்பட்டது. ஆனால் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் திடீரென விலகி கொள்ள சிக்கல் ஏற்பட்டது.கட்டுமான பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் செலவில் பான்சியோனா பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மீண்டும் கட்டி எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள் தேசிய கட்டுமான கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, டெண்டர் பணிகளும் துவங்கியுள்ளன. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும், ஆகஸ்ட் மாதத்திற்குள் பான்சியோனோ பள்ளியை பழமை மாறாமல் கட்டி எழுப்பப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்பள்ளிக் கட்டடம் உள்ள இடம் மதாம் ஸ்மித்து என்ற பெண்மணியால் பள்ளி அமைப்பதற்கு நன்கொடையாக 1848ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அளிக்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவிக்கிறது.கவர்னர் திவாரி காலத்தில், அக்கட்டடம் பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்காக மட்டும் பயன்படும் என்று 1984ம் ஆண்டு அக்டோபர் 6ல் அரசாணை வெளியிடப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் உலகம் முழுவதும் பிரெஞ்சு பேசும் நாடுகளில் பரவி உள்ளனர். பிரான்ஸ் நாட்டிற்கும் - புதுச்சேரிக்கு உறவு பாலமாக திகழ்ந்த பான்சியோனோ பெண்கள் பள்ளியின் மீட்டெடுப்பு மாணவர்கள், பெற்றோர் கள், கல்வியாளர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.